"அசுரன்" வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஏன் இந்த நூலை வாசிக்கவேண்டும்?


அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்,ஆனந்த் நீலகண்டன் தமிழ்மன்னன் இலங்கைவேந்தன் இராவணனைப்பற்றி எழுதிய நாவல்தான் அசுரன் இன் நாவலை நாகலட்சுமி சண்முகம் லை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.இராவணன் என்றதுமே 10 தலைகளுடன் கொல்லப்படுவதற்காகவே உருவான அசுரன் என்றுதான் எமக்கு சிறியவயதில் இருந்தே கற்பிக்கப்பட்டிருக்கின்றது அதோடு அசுர இனமும் அழிக்கப்படவேண்டிய இனம்தான் என்றும் கடவுளரைப்போற்றும் புராணக்கதைகளும் நமக்குகூறிக்கொண்டிருக்கின்றன ஆனால் ஆனந் நீலகண்டன் கதையை எதிர்த்தரப்பில் இருந்து ஆரம்பித்திருக்கின்றார் ஆம் இந்த நாவலில் இராவணம் எம்முடன் பேசுகின்றான்.போர்க்களத்தில் மரணத்திற்கான இறுதித்தருணங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இராவணன் தான் கடந்துவந்தபாதையை எண்ணிப்பார்க்கின்றான் தான் பெற்ற மகத்தானவெற்றிகள்,வரலாற்றுத்தவறுகள்,ஆசைகள்,காமம்,பொறாமை,கோபம் என்று அனைத்தையும் மீட்டிப்பார்க்கின்றான்.


இங்கே இராவணன் அப்பழுக்கற்ற கடவுளாகக்காட்டப்படவில்லை அவனும் எல்லா உணர்ச்சிகளையும் உடைய மனிதர்களுக்கேயுரிய சகல பலவீனங்களுடன் அவனே அவனுடன் போராடுபவனாகவே காட்டப்பட்டிருக்கின்றான்.இராவணனைவெளிப்படையாக தோலுரித்துக்காட்ட அவன் தனது மனட்சாட்சியுடன்பேசுவதுபோல்தன் கதைசெல்கின்றது. தோற்றவர்களின் இரத்தத்தைக்கொண்டு வெல்பவர்களால் எழுதப்படுவதுதான் வரலாறு என்று கூறுவார்கள்,ஏனென்றால் தோற்றவர்களின் உரிமைக்குரல்களோ,துன்பங்களோ,முறைப்பாடுகளோ,இழைக்கப்பட்ட அநீதிகளோ என்றைக்குமே வெற்றிபெற்றவர்களின் வரலாற்றுப்பக்கங்களில் இடம்பெற்றிருப்பதில்லை.

இந்தியாவில் 300 மேற்பட்ட இராமாயணங்கள் இருப்பதாக ஆனந் நீலகண்டன் குறிப்பிடுகின்றார், ஆனந் நீலகண்டன் கேரளாவைச்சேர்ந்தவர் அங்கிருக்கும் கொச்சி எனப்படும் அழகிய ஊர்தான் அவரின் இருப்பிடம் அவரைச்சூழ இருக்கும்கோவில்கள் சிறியவயதில் இருந்தே அவரின் காதுகளைப்பிந்தொடர்ந்த புராணக்கதைகள் இவைகளால் ஈர்க்கப்பட்ட அவருக்கு எதிர்மறையாகக்காட்டப்பட்ட கதாப்பாத்திரங்களில்தான் ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது.இதனால் பலரிடம் விவாதமும் செய்திருக்கின்றார் நீலகண்டன் நாளாக நாளாக இராவணன் இவரை ஆக்கிரமித்து தன்கதையையும் அவருக்கு கூறத்தொடங்கியிருந்தான் அதன்வெளிப்பாடுதான் இந்த நாவல்.

ஆனந் நீலகண்டன் கௌரவர்கள் என்ற நாவலின் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாயிருந்தார்.துரியோதனின் கதையை அவனதுபக்கத்து நியாயங்களைக்கூறும் நாவல் சுருக்கமாக துரியோதனின் மகாபாரதம் அந்த நாவல்.அந்த நாவலைப்படித்துவிட்டு அசுரன் நாவலைப்படிக்கும்போது சற்று சலிப்பு ஏற்படலாம் ஏனென்றால் கௌரவர்கள் நாவல் மூன்றாவடு நபர் கதையை எமக்கு கூறுவதுபோல் சென்றுகொண்டிருக்கும் ஆனால் அசுரன் இராவணன் எம்முடன் நேரடியாகப்பேசுவதுபோல் இருக்கும்.இருந்தும் சில பக்கங்களைத்தாண்டியதுமே தீ நிச்சயம் பற்றிக்கொள்ளும்.


நாவலின் ஆரம்பத்திலேயே இராவணனின் ஆட்சி உச்சியில் இருக்கும்போது இந்தியா மற்றும் இந்தியாவைச்சூழவுள்ள பகுதிகள் எப்படி இருந்தன என்ற வரைபடம் காட்டப்படுகின்றது.இராவணன் அசுரப்பெண்ணுக்கும் பிராமணத்தந்தைக்கும் மகனாகப்பிறக்கின்றான்.சிறியவயதில் இருந்தே அளவுக்கதிகமான வறுமையில் ஒட்டுமொத்தகுடும்பமும் துன்பப்படுகின்றது.2000 வருடங்களுக்குமுன் வீரம்,கலாச்சாரம்,கலை,கல்வி என அனைத்திலும் உச்சத்தில் இருந்த அசுரர்கள் ஏன் இப்படி அனாதரவானோம் என அடிக்கடி  எண்ணத்தொடங்கினான் இராவணன்,இதனால் சிறியவயதில் இருந்தே விடுதலை அவன் மனதில் எரியத்தொடங்கியிருந்தது.பிரமாணத்தந்தை போதித்தபலவிடயங்கள் முக்கியமாக வருணாச்சிரமச்சட்டங்கள் இராவணனின் கோபத்தை கிளறியது கொஞ்சமும் அவற்றுடன் இராவணன் இணங்கவில்லை இப்படித்தான் கதை ஆரம்பிக்கின்றது.

இந்த நாவலில் முக்கியான அடுத்த கதாப்பாத்திரம் பத்ரன் இராவணன் வாய்மூடிய இடங்களிலெல்லாம் பத்ரன் பேசுகின்றான்.இந்திரன் என்ற கொடூரமான தேவர்தலைவனின்  படை பத்ரன் அமைதியாக வாழ்ந்தகிராமத்தை சூறையாடுகின்றது அவன் கண்முன்னாலேயே அவனது சிறியமகள் கொடூரமாகக்கொல்லப்படுகின்றாள்,மனைவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றாள் பத்ரன் தப்பியோடுகின்றான் இறுதியில் இளைஞனாக படைதிரட்டிக்கொண்டிருந்த இராவணனிடம் சரணடைகின்றான்.

படைதிரட்டிய இராவணன் இலங்கையைக்கைப்பற்ற உதவியது பத்ரன்தான் குபேரனின் படைக்கு விசம்வைத்துக்கொல்கின்றான் பத்ரன். இராவணன் இலங்கையைக்கைப்பற்ற இதுதான் உதவுகின்றது இதற்காகவே பலதடவைகள் இராவணன் வருந்துகின்றான் இப்படியான கோழைத்தனமானவெற்றி தனக்குதேவையா என்று அவனது மனட்சாட்சி அவனைக்குடைந்து எடுத்துவிடுகின்றது.

இந்தியாவின் இமயம்வரை அசுரர்களின் கொடியைப்பறக்கவிடவேண்டுமென்பதில் மிகத்தீவிரம் காட்டிய இராவணன் செல்லும்வழியில் சந்தித்த சிற்றரசுதான் அயோத்தி,சில மணி நேரங்களிலேயே இராவணனின் மிகப்பெரும்படை அயோத்தியை கைப்பற்றிவிடுகின்றது அங்கிருக்கும் கிருஸ்னன் சிலைகளை நொருக்குகின்றது.அந்த நகரைக்கைப்பற்றும்போது இராவணன் கண்ட காட்சிகள் அவனை மலைக்கவைத்தன அங்கே பெண்கள் முக்காடு அணிந்திருந்தார்கள்,அரசசபையிலும் யாருமே இருக்கவில்லை. நாட்டைக்கைப்பற்றியதும் அங்கிருக்கும் எந்த ஆண்மகனையும் தப்பவிடுவதில்லை என்பதுதான் அன்றைய சட்டமாக இருந்தது இதை தேவர்களும்,அசுரர்களும் பின்பற்றிவந்திருந்தர்கள் ஆனால் இராவணன் அயோத்தியில் இருந்து ஒரு சிறுவனும் அவனது குடும்பமும் தப்பிச்செல்ல அனுமதித்துவிடுகின்றான் இராவணன் தளபதி எவளவுகேட்டுக்கொண்டும் இராவணன் தப்பிச்செல்லவிட்டுவிடுகின்றான் அந்த சிறுவனின் பெயர்தான் ராமன்.இதையெல்லாம் பின்னர் மரணிக்கும்தறுவாயில் எண்ணிப்பார்க்கின்றான் இராவணன்.

சீதை இராவணனின் மகள் இதுதான் இந்த நாவல்கொடுத்தமிகப்பெரிய அதிர்ச்சியானவிடயம்.இராவணனுக்கும் ஒரு பிராமண விதவைக்கும் பிறந்தவள்தான் சீதை,உன் இனமளிய இவளே காராணமாவாள் என யோசியர் கூறிவிட இராவணனின் தளபதிகள் அந்தப்பெண்ணையும் மகளையும் கொன்றுவிடுமாறு பத்ரனிடம்கூறிவிடுகின்றார்கள்.ஆனால் பத்ரனால் அதைச்செய்யமுடியவில்லை.அந்தப்பெண்குழந்தை  தவறுதலாக தேவர்களிடம்கிடைத்துவிட அவர்களிடம் அந்தக்குழந்தை வளர ஆரம்பிக்கின்றது.


ஒருவழியாக் உண்மையைக்கண்டுபிடித்த இராவணன் மயனுடன் புஷ்பகவிமானத்தில் இலங்கையில் இருந்து இந்தியாசென்று சீதையைக்கைப்பற்றி மீண்டும் இலங்கைக்கே கொண்டுவந்துவிடுகின்றான் ஆனால் எவளவு முயற்சிசெய்தும் அவனால் நான் உன் தந்தை என்றவிடயத்தை அவளுக்கு கூறமுடியவில்லை.இதற்கிடையில் இலங்கைக்குள் அரசியல் குழப்பங்கள் நடைபெறுகின்றது.இராவணன் தன் கூட்டத்தினருக்கு தலைவனாகிவிடுகின்றான் அவனது ஆட்சியில் சாதிப்பாகுபாடுகள் இல்லை யாருக்குத்திறமை இருந்தாலும் அவர்கள் எந்த மேல் பதவியையும் வகிக்கமுடியும் ஆனாலும் கூவம் போன்ற கிராமமும் அடித்தட்டுமக்களும் அவனது ஆட்சியிலும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.அவர்களுடன் வாழும் ஒருவனாகத்தான் பத்ரன் காட்டப்படுகின்றான்.தனக்கு சன்மானமாக கிடைத்த ஒருமூட்டைவெள்ளிப்பணத்தை வெளியே தூக்கியெறிந்து ராவணன் அனுப்பிய வீரர்கள் முகத்தில் உமிழ்ந்துவிட்டு எம் நிலைக்கு நீங்களே காரணம் என ஏசுகின்றான் ஆனாலும் அவர்கள் சென்றபின்னர் வீட்டில் ஒருவேளை உணவுக்கே வழியில்லை என உணர்ந்து மூட்டையை எறிந்த இடத்துக்குசென்று அங்கு அந்தப்பணத்துக்காக அடிபட்டுக்கொண்டிருப்பவர்களுடன் இவனும் கட்டிப்புரள்கின்றான் ஆனால் இவனுக்கு சில வெள்ளிக்காசுகள்மட்டுமே கிடைக்கின்றன அதை எடுத்து மனைவியிடம் கொண்டுசென்றுகொடுக்காமல் கள்ளுத்தவறணைக்குசென்றுவிடுகின்றான் பத்ரன்.


எங்கே ராமன் தோற்கடிக்கப்படுகின்றார்?


/அனுமன் இலங்கைக்குள் இரகசியமாக நுழைந்து ராவணன் கோட்டைக்கு காவலாக இருந்த இருவரை கொன்றுவிட்டு அத்துமீறி உள்ளே புகுந்துவிடுகிறார், கோபமடைந்த இராவணன் அவனது வாலுக்கு தீவைக்குமாறு கட்டளையிட அனுமன் தப்பித்து இலங்கைக்கு தீவைத்துவிடுகிறார்.


எங்கும் பிணக்குவியல்கள் குழந்தைகள் ,பெண்கள்,முதியவர்கள்,துறவிகள் என அனைவரும் உருகி உருக்குலைந்துபோய் வீதிகளில் கிடக்கின்றார்கள் எங்கும் எரிந்த தோலின் துர்நாற்றம் ஆடு,மாடு விலங்குகளும் எரிந்துபோய் குற்றுயிராய் கிடக்கின்றன/

/அரண்மனைக்குள் புகுந்து மண்டோதரியை அங்கதன் கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி காட்டுக்குள் வீசிவிட்டு சென்றுவிடுகின்றான். தேடிச்சென்ற இராவணன் மண்டோதரியை தன் சால்வையால் போர்த்தி அவளை மீண்டும் அரண்மனைக்கே கொண்டுவருகிறார் அவரை ஏற்றுக்கொள்கின்றார் ஆனால் ராமன் சிதையில் ஏறும்படி சீதைக்கு பணிக்கின்றார் /

/இராவணனின் இறுதிச்சடங்கும் அங்கு நடக்கும் சம்பவங்களும் இறுதியுத்தத்தை நிச்சயம் உங்களுக்கு நினைவுபடுத்தும்/

இராவணன் தொடர்பான இலங்கை அரசியல் மிக ஆழமானது,நாம் இராவணன் வழித்தோன்றல்கள் என நிரூபிப்பதனூடாக தம் தடத்தை வரலாற்றின் ஆதியில் இருந்தே பதிப்பதற்கு முயற்சிசெய்துகொண்டிருக்கின்றார்கள் பெரும்பான்மையினர்.

யார் கண்டார் ? இன்னும் சிலவருடங்களில் இராவணனின் புஷ்பகவிமானம்கூட கண்டுபிடிக்கப்படலாம். 

நெற்றியில் திருநீற்றைப்பூசிக்கொண்டு "எக்க ஜாதியே எக்க ரட்டே"  என ராவணன் பேசுவதை கற்பனைசெய்யும்போது எப்படி இருக்கின்றது?

கருத்துரையிடுக

0 கருத்துகள்