சிகிரியா ராவணனின் விமானம் தரையிறங்குமிடம்?

Landing place of Ravana's plane

இலங்கையின் மிகப்பிரபலமான இடங்களுள் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இடம்தான் சிகிரியா இது கலைப்பாரம்பரியத்தின் சின்னமாகவும் UNESCOவினால் பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரிய களமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகருக்கு அருகாமையில்தான் இந்த குன்று அமைந்திருக்கின்றது.சிகிரியா அல்லது சிங்ககிரி என அழைக்கப்படும் இந்தக்குன்று சுமார் 180 மீட்டர் உயரத்தைக்கொண்டது.பிரதானவீதியில் இருந்து சிகிரியாக்குன்றுக்கு செல்லும் வீதிக்கு எந்தபொதுப்போக்குவரத்துவசதியும் கிடையாது  சொந்தவாகனம் இல்லையென்றால் ஆட்டோவில் மட்டுமே செல்லமுடியும்.


இலங்கையின் வரலாற்றைக்கூறும் சூழவம்சம்(chulavamsa) இந்தக்குன்று காசியப்ப மன்னனினால் தற்போது உள்ள வடிவத்திற்கு வடிவமைக்கப்பட்டது எனக்கூறுகின்றது.

காசியப்பன் என்ற மௌரியவம்சத்து மன்னன் தன் தந்தையான தாதுசேனனை
சிறைபிடித்து ஆட்சியைக்கைப்பற்றுகின்றான்.உண்மையில் முடிக்குரிய மகனாக இருந்த தாதுசேனனது முதல் மனைவியின் மகன் தந்தை கைதுசெய்யப்பட்டவிடயத்தை அறிந்த்ததும் இலங்கையைவிட்டுத்தப்பியோடி தமிழ் நாட்டில் தஞ்சம்புகுந்துகொள்கின்றான்.தந்தையைக்கைதுசெய்த காசியப்பன் மறைத்துவைத்திருக்கும் பெரும்தொகைசெல்வத்தை தன்னிடம் தந்துவிடும்படி அவரை துன்புறுத்த அவர் காசியப்பனை கலாவாவிக்கு அழைத்துச்சென்று இதுதான் நான் சேமித்துவைத்த செல்வம் எனக்காட்டுகின்றான் தாதுசேனன்.கோபமடைந்த காசியப்பன் தாதுசேனனை அந்தவாவியின் கரையிலேயே உயிரோடு சமாதிகட்டிவிடுகின்றான்.இந்த சம்பவத்திற்கு பின்பு எந்த சந்தர்ப்பத்திலும் தன் மூத்ததாயின் மகனான மொகல்லன் படைதிரட்டி வந்து தன்னைத்தாக்கக்கூடும் என அஞ்சிய காசியப்பன் உடனடியாக தலை நகரை சிகிரியாவுக்கு மாற்றி அங்கிருந்த சிகிரியாக்குன்றை தனது மாளிகையாகவும் பாதுகாப்பிடமாகவும் அமைத்துக்கொள்கின்றான்

.

சகோதரனுக்கு அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தாலும் சிற்பக்கலை,ஓவியக்கலை,கட்டிடக்கலையில் மிகவும் இரசனைஉள்ளவனாக காணப்படுகின்றான் காசியப்பன்.இதற்கு சிகிரியாக்குகைகளினுள்ளே இருக்கும் இயற்கை மூலிகைக்ளினால் உருவாக்கப்பட்ட ஓவியங்களே சான்றாக அமைகின்றது.இந்தக்குன்றின் அடித்தளத்தில் தடாகங்களும் பூந்தோட்டங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன அதோடு குன்றின் வாசல்வரை கட்டிடங்களும் மாளிகைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.ஒட்டுமொத்தமாக 1200 படிக்கட்டுகளைக்கடந்துதான் இந்தக்குன்றின் உச்சியை அடையமுடியும்.


மேலே ஏறிச்செல்லும்பாதையின் படிகள் சில சிதைவடைந்து காணப்படுகின்றன இதன்காரணமாக மேலே ஏறுவதற்கு ஏற்றவகையில் இரும்பாலான பாலங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.மேலே ஏறிச்செல்லும் வழியில் பளிங்குச்சுவர்களையும் எம்மால் அவதானிக்கமுடியும்.பாறைகளை உரோஞ்சி மெருகேற்றி சுண்ணாம்பு பூச்சுக்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட சுவர்கள்தான் இவை,இவை பார்ப்பதற்கு பளபளப்பாக காட்சியளிக்கும் இந்த சுவர் இப்படி பளபளப்பாக  உருவாக்கப்பட்டதற்கும் கிராமவாசிகள் அழகான ஒரு காரணத்தைக்கூறுகின்றார்கள்.


காசியப்பன் உயிரோடு இருந்தபோது சிகிரியாக்குன்றையும் அதன் தோட்டம் மற்றும் ஓவியங்களைப்பார்ப்பதற்கு பல முக்கியஸ்தர்கள்வருவார்களாம் அப்படி வருபவர்கள் பார்த்துவிட்டுசெல்லும்போது தமது எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் பளிங்குச்சுவர்மீது கல்வெட்டுப்போல் எழுதிவிட்டுசெல்வார்களாம்,சாதாரண எழுத்தாணியினால் சுவரில் இலகுவாக எழுதக்கூடியவகையிலேயே மென்மையாக இந்த சுவர் உருவாக்கப்பட்டிருக்கின்றது.அப்படி வந்து ஓவியங்களைப்பார்த்து மெய்மறந்துபோனவர்கள் தமது அனுபவங்களை கவிதையாக சுவரில் செதுக்கிவிட்டு சென்றிருக்கின்றார்கள்,அவற்றில் சில குறிப்பெடுக்கப்பட்டுள்ளன ஆனால் இப்போது இந்தச்சுவற்றை உற்றுப்பார்த்தால் மட்டுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதைகள் புலப்படும் அதோடு இப்போது சுவரின் நிறமும் மாற்றமடைந்துகொண்டுவருகின்றது.

சிகிரியாக்குன்றின் உச்சிப்பகுதியை அடைவதற்கு முன்பாக ஒரு சமதளத்தைக்கொண்ட தரைப்பகுதியை எம்மால் அடையமுடியும்.இந்தத்தளத்தில் இருந்து பார்த்தால் உச்சியை தெளிவாக அவதானிக்கமுடியும் அதோடு உச்சிக்கு ஏறவேண்டிய படியையும் அவதானிக்கமுடியும்.அந்தப்படிகள் இரண்டு மிகப்பெரிய சிங்கத்தின் கால்களுக்கிடையில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது.ஆம் படுத்திருக்கும் மிகப்பெரிய சிங்கத்தின் கால்களுக்கிடையில் இருந்துதான் படிகள் கட்டப்பட்டிருந்தன ஆனால் கால ஓட்டத்தில் சிங்கத்தின் தலை அழிவடைந்துவிட்டது தற்போது சிங்கத்தின் கால்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.



மேல்தளத்திற்கு சென்றதும் சமனற்ற பல தளங்களைக்கொண்ட தரையை அவதானிக்கமுடியும்,அங்கு பல மாளிகைகளின் அத்திவாரங்கள் இன்னும் எஞ்சியிருப்பதைப்பார்க்கமுடியும் அதோடு ஒட்டுமொத்த தோட்டத்தையும் சிகிரியாவை சுற்றியிருக்கும் காடுகளையும் தொலைதூரத்திற்கு பச்சைப்பசேல் என்று வளர்ந்திருக்கும் மரங்களையும் அவதானிக்கமுடியும்.மேல்தளத்தில் பாறையில் குடையப்பட்ட காணப்படுகின்றன அதோடு கழிவு நீர் கால்வாய்கள் என்பனவும் பாறைகளைச்செதுக்கியே அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்த  நீச்சல்தடாகத்திற்கான நீர் மழை நீர் மூலம் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


இத்தனைவிடயங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இறுதி நேரத்தில் காசியப்பன் எதற்கு பயந்தானோ அது நடந்தேறியது,அவனது சகோதரன் இந்தியாவில் இருந்து படைதிரட்டிவந்து சிகிரியாவைக்கைப்பற்றினான் தப்பிக்கவழியில்லாமல் காசியப்பன் தன் கழுத்தை தானே துண்டித்து மரணமடைந்தான்.


இந்தவரலாற்றைவிட வேறு ஒரு வரலாற்றையும் இந்தக்குன்று தாங்கி நின்கின்றது.இலங்கேஸ்வரன் ராவணனது புட்பகவிமானம் இங்குதான் தரையிறங்கியது என்று மக்களால் நம்பப்படுகின்றது.இலங்கையை ராவணன் ஆட்சிசெய்தபோது சிகிரியக்குன்றும் அவனது கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்திருக்கின்றது.அவன் மறைந்த சில ஆயிரம் ஆண்டுகளின் பின்னர் அந்தக்குன்றை கண்டுபிடித்து தன் மறைவிடமாக்கி அங்கேயே வாழ்ந்துமடிந்தான் காசியப்பன்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்