இடுப்புவலிக்கு என்ன செய்யலாம்

இடுப்பு வலிக்கு நிரந்தரமான தீர்வு தரும் இயன் மருத்துவ (பிஸியோதெரபி ) சிகிச்சை..



இன்று நாளுக்கு நாள் மருத்துவ உலகம் பல்வேறு விதமான வளர்ச்சிகளை அடைந்து இருந்தாலும் இளையோர் முதல் வயது வந்தவர்கள் வரை பலரும் பாதிக்கப்படும் ஓர் பிரதானமான நோய் நிலைமை இடுப்பு வலியாகும் . இன்று நாளாந்தம் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் இடுப்பு வலியை கட்டாயம் அனுபவித்து இருப்பார்கள். அந்த அளவுக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி,  அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளாக இருந்தாலும் சரி இடுப்பு வலி ஓர் பாரிய பிரச்சினை யாக உரு மாறி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை ஆகும். 


அத்துடன் பல்வேறு நோயாளிகள் இடுப்பு வலிக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வைத்திய முறைகளை தெரிவு செய்தும் பல்வேறு வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ச்சியாக பாவித்தும் கூட எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் நோய் நிலைமை பல மடங்கு தீவிரமடைந்த பின்னரே இயன் மருத்துவத்திற்கு பரிந்துரை செய்யப்படுவது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

பொதுவாக இடுப்பு வலியை என்பு சார்ந்த இடுப்பு வலி, நரம்பு சார்ந்த இடுப்பு வலி, நரம்பு சார்ந்த இடுப்பு வலி, மற்றும் தசை சார்ந்த இடுப்பு வலி என பிரதானமாக வகைப்படுத்தலாம்.  இன்றைய Covid தொற்று காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகின்ற இடுப்பு வலி என்பு, தசை சார்ந்த இடுப்பு வலி ஆகும். ஏனெனில் தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு நிலையினால் பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அதிகளவானர்கள் பொறிமுறை வகையான(Mechanical type ) இடுப்பு வலிக்கு ஆளாகி வருகின்றார்கள். அத்துடன் போதிய உடற் பயிற்சிகளை செய்ய முடியாதனாலும் உடல் உழைப்பு குறைந்ததனாலும் நவீன வாழ்க்கை முறையாலும் பொறிமுறை ரீதியான இடுப்பு வலி அதிகரித்து கொண்டே செல்கின்றது. 

அத்துடன் பிழையான உடற் கூற்றியல் முறைகள் (Poor posture disciplines ) ஓரிடத்தில் அதிக நேரம் இருத்தல் போன்றனவும் மற்றும் அதிகளவிலான மன உளைச்சலும்,  நித்திரையின்மையும் இத்தகைய இடுப்பு வலியை அதிகரிக்கின்றது.

இன்னொரு வகை இடுப்பு வலியாக மூட்டு சார்ந்த பிரச்சினைகள் காரணமாகின்றது. சாதாரணமாக வயதாகும் போது நாரி பகுதியில் காணப்படுகின்ற முள்ளந்தண்டு என்புகள் தேய்வடைவதாலும் மற்றும் முள்ளந்தண்டு என்புகளுக்கிடையில் காணப்படும் மூட்டிடை பாயம் வெளி தள்ளப் படுவதாலும் இன்னொரு வகையான இடுப்பு வலி ஏற்படுகின்றது. இவ்வாறு வெளி தள்ளப்படும் முள்ளந்தண்டிடை வட்டத் தட்டு அதற்கு அருகாக காணப்படும் நாரி பிரதேச நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலி ஏற்படுகின்றது. இவ் வகையான இடுப்பு வலி Lumbar Radiculopathy  என அழைக்கப்படும்.  இவ்வாறான நோயாளிகளிற்கு கடுமையான தாங்க முடியாத வலி ஏற்படுவதுடன்  கால் மற்றும் சந்து பகுதியில் உளைச்சல் மற்றும் விறைப்பு தன்மை,  நடக்க முடியாத நிலைமை ஏற்படல் மற்றும் அதிக நேரம் நிற்றல் , அமர்ந்து இருத்தல் போன்றவற்றில் சிக்கல் நிலை தோன்றும். இதற்கு இயன் மருத்துவத்தில் நிரந்தரமான தீர்வு சிகிச்சைகள் உண்டு. ஆனாலும் இதே போன்று குணங் குறிகளை கொண்ட சில நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றால் ஓர் நரம்பு சத்திர சிகிச்சை நிபுணரின் உதவியை நாட வேண்டி இருக்கும். ஏனென்றால் சில வேளைகளில் முள்ளந்தண்டு சார்ந்த புற்று நோய் கட்டிகள் மற்றும் ஒரு சில தொற்றுக்கள் நாரி நரம்புகளையும் முண்ணான் நரம்பு குழாயையும் தொடர்ச்சியாக அழுத்துவதால் நோய் நிலைமை அதிகரித்து கொண்டே செல்லும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முள்ளந்தண்டு சத்திர சிகிச்சை முறைகள் பலனளிக்கும். ஆனால் எல்லா இடுப்பு வலிக்கும் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இல்லை.. 


பொதுவாக Conservative முறை எனும் மாற்று முறையில் 6 மாதங்களுக்கு எந்த வித முன்னேற்றமும் அடையாத நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை பலனளிக்கும்.. அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்ப இயன் மருத்துவ சிகிச்சைகள் இன்றியமையாதது ஆகும்.

மேலும் அளவுக்கு அதிகமான பாரம் தூக்கும் வேலைகள்,  விழுதல் அல்லது அடி பட்டு இருத்தல், தோட்ட வேலைகள், மந்தமான ஊட்டச்சத்து மற்றும் விட்டமின் D மற்றும் கல்சியம் பற்றாக்குறை மற்றும் பலவீனமான உடலமைப்பு போன்றன இடுப்பு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.  இது போன்ற இடுப்பு வலியை நாளாந்த வாழ்வில் அனுபவிப்பவர்கள் கால தாமதம் இன்றி இயன் மருத்துவ சிகிச்சையை பெற்று விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.  அத்துடன் இயன் மருத்துவத்தின் மூலம் பல்வேறு வகையான வலி நிவாரணி மாத்திரைகளின் பாவனை இழிவளவாக்கப் படுவதால்  பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மற்றும் உரிய காலத்தில் தொடங்கப்படும் இயன் மருத்துவ சிகிச்சைகள் தேவையற்ற அலைச்சலையும் பண வீண் விரயத்தையும் குறைக்கும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்