தொடர் 01
வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி……?
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எவ்வாறு அதை அடைந்துள்ளார்கள் என உற்று நோக்குவோமானால் , அவர்கள் சரியான முடிவுகளை சரியான நேரத்திலே எடுத்திருப்பார்கள். அவர்களால் எவ்வாறு அந்த சரியான முடிவுகளை எடுக்க முடிகிறது ?அவர்கள் கடந்த காலங்களில் பெற்ற அனுபவங்களின் மூலம். அவர்களுக்கு இந்த அனுபவம் எவ்வாறு கிடைக்கின்றது? அவர்கள் கடந்த காலங்களில் எடுத்த தவறான முடிவுகளின் மூலம்.
“கனவு காணுங்கள்…..” என்று இளைஞர்களை தட்டி எழுப்பினார் அப்துல் கலாம் . கனவுகள் எண்ணங்களாக வடிவம் பெறுகின்றன. எண்ணங்கள் செயல்களாகப் பரிணமிக்கின்றன. மனிதர்கள் தாங்கள் எப்படி இருக்கப் போகிறோம் என்று நம்புகிறார்களோ , அதைப்போலத்தான் பெரும்பாலும் மாறுகிறார்கள்.
என்னால் எதுவுமே செய்ய முடியாது என்று நாம் நம்பினால் அந்த எண்ணமே எம்மை எதுவுமே செய்ய முடியாதவனாக மாற்றிவிடும் . ஆனால் என்னால் முடியும் என்று நம்பினால் ஆரம்பத்தில் அதை முடிப்பதற்கான திறமை இல்லாதவனாக நாம் இருந்தாலும் பின்னர் அந்த திறமையை நாம் பெற்று விடுவோம் . சில தடைகளும், தாமதங்களும் குறுக்கிட்டாலும் கூட நனவாக்க முயன்ற கனவுகளை அடுத்து தான் எப்போதுமே வெற்றி தொடர்ந்து வருகிறது.
நேற்றைய ஏமாற்றங்கள் நாளைய கனவுகளை அமுக்குவதற்கு ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர்கள். உங்களிடம் உள்ள தனித்துவம் மற்ற யாரிடமும் இருக்காது . இந்த உண்மையை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.
வெற்றி தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை . இரண்டுமே தவிர்க்க முடியாதவை. ஆனால் தோல்வி ஏற்படும் பொழுது துவண்டு விடக்கூடாது. மனம் தளரக்கூடாது . வெற்றிகள் அனைத்தும் உடல் வலிமையால் பெறக் கூடியவை அல்ல. மலையே குலைந்தாலும் மனம் தளரக்கூடாது . மனதில் உறுதி இருந்தால் மலையை கூட புரட்டி விட முடியும்.
தோல்வியைக் கண்டு அஞ்சுபவன் இடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது . வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம் தான் .
வாழ்வை எதிர்த்துப் போராடுபவனுக்கு தான் வாழ்வு வழி விட்டுக் கொடுக்கிறது . கோழைத்தனமாக ஒதுங்கி தனக்குள் தானே உருகி தன் மேல் தானே பரிதாபப்பட்டு கொண்டு இருப்பவனுக்கு வாழ்வில் விடிவே கிடையாது . வாழ்வில் எத்தனையோ துன்பங்கள் வரும். அதை எல்லாம் சவாலாக எடுத்து எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து வாழ வேண்டும்.
“வெற்றி என்பது எளிதல்ல தோல்வி என்பது முடிவும் அல்ல”
வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொள்ளாமல் முன்னேறவே முடியாது .
தொகுப்பு
தங்கவடிவேல் நிருசன்
தொடர் 01 முற்றும்
0 கருத்துகள்