பல நோய்களுக்கு மருந்தாகும் உடற்பயிற்சி எனும் உன்னத சிகிச்சை

Exercise is a classic treatment for many ailments


இன்று நாம் அதிகளவில் எமது நாளாந்த வாழ்வில் பேசப்படுகின்ற வார்த்தையாக  தொற்றா நோய்கள் மாறியுள்ளது.    என்றுமனிதன் உடல் உழைப்பை மறந்து சிறிது சிறிதாக இயந்திர  வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட அன்றே அவனை தொற்றா நோய்கள் ஆட்கொள்ள தொடங்கிவிட்டது.   தொற்றா நோய்கள்  எனப்படுவது நீண்ட கால இடைவெளியில் மெதுவாக விருத்தி அடைந்து இறுதியில் உயிருக்கு அச்சுறுத்தலாக  மாறுகின்ற நோய்கள் தொற்றா நோய்கள் ஆகும். பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம்,  இரத்தத்தில் அதிக கெட்ட கொழுப்புக்கள் சேர்தல்,புற்று நோய்கள் போன்றன அவற்றுள் சிலவாகும். 

இன்று நாம் விரிவாக ஆராய  விருப்பது உடற்பயிற்சி மூலம் தொற்றா நோய்களில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆகும். 

எமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிகவும் இன்றியமையாததும்,  அத்தியாவசியமானதும்  ஆகும்  என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.   ஆனால் நாம் ஏன்? எதற்காக? உடற்பயிற்சியை செய்ய வேண்டும்? என்பதன் சரியான காரணத்தை பலர் அறியாமல் இருக்கிறோம்.  இன்று உடற்பயிற்சி என்பது உடல் எடையை குறைப்பதற்கான பயிற்சி என்று மட்டும் எண்ணியே பலர் செய்து கொண்டிருப்பது கண்கூடு.  உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமான பயிற்சி அல்ல.  உடற்பயிற்சி உடலினுடையதும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான  பயிற்சியாகும்.  உடற்பயிற்சி வெறுமனே உடல் எடையை குறைப்பதற்கு மாத்திரமன்றி உடலில் பல தொற்றா  நோய்கள் வராமல் தடுத்து  எம்மை பாதுகாப்பதற்கான பயிற்சியாகும்.  எமது உடலினை  கட்டமைப்பு ரீதியிலும் தொழிற்பாட்டு ரீதியிலும் பலப்படுத்துவதற்கான பயிற்சியாகவும்  உடற்பயிற்சி விளங்குகின்றது.  இவ்வாறு பல விதமாக உடற்பயிற்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கூறிக் கொண்டே போகலாம்.உடற்பயிற்சி மூலமாக பல்வேறு விதமான  நன்மைகளை எமது உடல் பெறுகின்றது,அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். 


உடற்பயிற்சியானது உடலின் சக்தியின் அளவை அதிகரிக்கின்றது.  அத்துடன் எமது உடலில் தேவைக்கு அதிகமாக காணப்படுகின்ற சக்தியின் கலோரியின்  அளவை குறைப்பதற்கு இது உதவுகின்றது.  இதன் காரணமாக எமது உடலில் மேலதிக கலோரிகளால்  கெட்ட கொழுப்புகள் உருவாகும் வீதமும் குறைகின்றது. 

எமது உடலில் பல்வேறு விதமான உறுப்புகளின் உறுதித்தன்மையை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி உதவுகின்றது.  இதன் மூலமாக மனித உடலின் உறுதித் தன்மை அதிகரிக்கின்றது.  இது மனித வன்கூட்டுத்தொகுதியின் தாங்கும் தன்மையை அதிகரிக்க உதவுகின்றது.  இதன் காரணமாக எமது உடலில் உள்ள என்புகள் தசைகள் பலம் பொருந்தியதாக மாறுகின்றது.  இவ்வாறு என்பு தசைகள் பலம் பொருந்தியதாக மாறும்போது சிறுசிறு உபாதைகள் ஏற்படும் போது எங்களுடைய உடல் உறுப்புகள் சேதம் அடையாமல் பாதுகாப்பதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கின்றது.  

மேலும் மனித உடலின் நிறையை உயரத்திற்கு ஏற்ற விதத்தில் பேணுவதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கின்றது.  தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் ஒருவருடைய நிறை  பெரும்பாலும் அவர்களுடைய  கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. 

மேலும் மனித உடலில் காணப்படுகின்ற கெட்ட கொழுப்புகளை(Low Density Lipoprotein ) அளவை குறைத்து High Density Lipoprotein  எனப்படும் நல்ல  இலிப்பிட்டுகளின் அளவை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி பெரும் பங்காற்றுகின்றது. 

நாம் உடற்பயிற்சி செய்யும் போது நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கின்ற மேலதிகமான கலோரிகள்  பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது.  இதன் மூலம் தேவையற்ற கொழுப்புக்கள் உடலில்  தேக்கம் அடைவதும் குருதியைக் கொண்டு செல்லுகின்ற நாடிகள்  மயிர் துளை குழாய்களில் ஏற்படுத்தப்படும் கொலஸ்ட்ரோல்  வடிவு உருவாக்கப்படுவதும் தடுக்கப்படுகின்றது.  இதன் காரணமாக எதிர்காலத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தொற்றா நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. 

 மேலும் உடற்பயிற்சியானது இதய தொழிற்பாட்டை சீராக பேண உதவுகின்றது.  உடற்பயிற்சி மூலம் இதயத் தசைகள் வலுவடைவதால் உயர் குருதியமுக்கம் மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றது. 


உடற்பயிற்சி மூளையின் சுறுசுறுப்பை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.  ஏனெனில் உடற்பயிற்சி மூலம் மூளைக்கு செல்லுகின்ற இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிப்பதால் மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒட்சிசன் மற்றும் போசனை பதார்த்தங்களின் விநியோகம் துரிதமாக அதிகரிக்கின்றது.  இதனால் மூளையின் கலங்களில் புத்துயிர்ப்படைந்து சுறுசுறுப்பாக செயற்படுகின்றது. 


 உடற்பயிற்சி மூலம் ஒரு சில ஓமோன்களின்  சுரப்பு துரிதப்படுத்தப் படுவதால் ஞாபகசக்தி, கற்கும் ஆற்றல் போன்றவை அதிகரிக்கின்றன.  அத்தோடு இத்தகைய ஓமோன்கள் Alzheimer's Disease  போன்ற  கிரகித்தல் உடன் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. 

 வழமையான உடற்பயிற்சி இரண்டாம் வகை நீரிழிவு நோய்( Type 11 Diabetes mellitus ) வராமல் தடுக்கிறது.  ஏனெனில் இது குருதி குளுக்கோசு மட்டத்தை சீர் செய்வதால் இது நீரழிவு நோய் வராமல் தடுப்பதில் போகின்றது.  எமது குருதியில் மேலதிகமாக காணப்படுகின்ற குளுக்கோசின் அளவை உடனடியாக குறைப்பதில் உடற்பயிற்சி பெரும் பங்காற்றுகின்றது.  இதன் காரணமாக நீரிழிவு நோயினால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான ஏனைய நோய் நிலைகளும் வருவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது.அத்துடன் Obesity  எனப்படும் அதிக உடல் பருமன் உடைய தோற்றமும் வராமலிருக்க உடற்பயிற்சி உதவுகின்றது.மேலும் உடற்பயிற்சி எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  நிர்பீடன  தொகுதியின் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது.  இதனால் உடலினுள் புகும் தீங்கான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவற்றுக்கு எதிராக பிறபொருள்(Antibodies) எதிரிகளை உருவாக்கி அவற்றை ஓரிடப் படுத்தி  அழிக்கும் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. 

உடற்பயிற்சி ஒரு சில வகையான புற்றுநோய்களின் விருத்தியை ஆரம்ப படிகளில் இருந்தே குறைப்பதற்கு பெரும் பங்காற்றுகின்றது.  சில வகையான குடல் புற்றுநோய்கள், நுரையீரல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும் உடற்பயிற்சி உதவி புரிகின்றது. 

இன்று பலரிடத்தில் காணப்படும் பெரும் பிரச்சினையாக உள்ள உறக்கமின்மைக்கு ஒரு  சிறந்த தீர்வாக உடற்பயிற்சி விளங்குகின்றது.  இன்று பலர் நித்திரை குழப்பத்தால் பல்வேறு வியாதிகளுக்கும் மன நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள்.  உடற்பயிற்சியின் மூலமாக சில ஓமோன்களின் சுரப்பு அதிகரிக்கப்பட்டு  அங்கே  சில ஓமோன்கள் சிறப்பாக தொழிற்படுவதால் நித்திரை என்பது சுலபமாகவே பலருக்கு வந்துவிடுகின்றது.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நித்திரை இன்மைக்கு ஏற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி ஒரு எளிய தீர்வாக அமைந்து விடுகின்றது. மேலும் உடற்பயிற்சி சில மன நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு காட்டுகின்றது.  மன நோய்களால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடற்பயிற்சி சிகிச்சைகளின் மூலமாக அவர்களுடைய உடல் மற்றும் உள ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகின்றது.  இது மன அழுத்தத்திற்கு காரணமான பல ஓமோன்களின் சுரப்பை குறைப்பதால்  மன அழுத்தத்தின் அளவை குறைப்பதில் பெரும் பங்குவகிக்கின்றது.அத்துடன் உடற்பயிற்சி விரைவாக முதுமைத் தோற்றம் அடைவதை கட்டுப்படுத்துகிறது.  இது உடலின் ஓருசீர்திட நிலையை பேணும் தொகுதியின் சிறப்பான தொழிற்ப்பாட்டால் கலங்கள் விரைவாக வயதாவதை குறைக்கின்றது.

உடற்பயிற்சி ஆனது மூட்டுகளின் நெகிழும் தன்மையை(flexibility ) அதிகரிப்பதில் உதவுகின்றது.  இதனால் உடம்பில் உருவாகின்ற பல்வேறு விதமான மூட்டு நோக்கள், தசைநார்கள் வலிகள்  ஏற்படாமல்  எமது உடலை பாதுகாக்கின்றது. 

ஆனால் இன்று பலரால் உடற்பயிற்சிகளை ஒழுங்கான வழிகாட்டுதல் இன்றி முறையற்ற விதத்தில் பொருத்தமற்ற வழிமுறைகளில்  செய்யப்படுவதால் சிலருக்கு ஆர்த்தரைடீஸ் போன்ற நோய்களின் தாக்கம் முன்பிருந்ததை விட அதிகரிக்கும்.  உதாரணமாக அதிக உடல் பருமனைக் குறைப்பதற்காக செய்யப்படும் அதிகளவிலான நடைப்பயிற்சி முழங்கால் வலியை அதிகரிக்கும்.  இதன் காரணமாக ஒருவர்  நடப்பதில் கூட சிரமங்கள் தோன்றலாம்.  இது நோய் நிலைமையை  முன்பிருந்ததைவிட அதிகரிக்கக்கூடும்.  எனவே சரியான உடற்பயிற்சிகளை ஒரு இயன் மருத்துவருடன் (Physiotherapist ) கலந்தாலோசித்து உங்களுடைய உடலின் தன்மைக்கு ஏற்ப பொருத்தமான பயிற்சியை பொருத்தமான  கால இடைவெளிகளில் பின்பற்றி நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வீராக.. 

K. ஹரன் ராஜ்  இயன் மருத்துவர்   அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை

K. ஹரன் ராஜ்

இயன் மருத்துவர் 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து பதிவிடுவதை விரும்புகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றிகள், உங்களைப்போன்றவர்களின் ஆதரவு எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது, நிச்சயமாக நாம் தொடர்ந்தும் எழுதுவோம் நன்றிகள்

      நீக்கு