பூப்படைந்தபெண்கள்- கர்ப்பிணி பெண்கள் எவற்றை உண்ணலாம்?

பெண்கள் வாழ்வில் மருந்தாகும் உணவு

இன்றைய காலகட்டத்தில் பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்அன்றும் இன்றும் என்றுமே குடும்பம் எனும் தேரானது பெண் எனும் அச்சாணியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.அச்சாணி உறுதியாக இருந்தால் தான் தேர் சரியாக பயணிக்கும்.அதே போல ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அக் குடும்பத் தலைவியின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. 


குடும்பத்தலைவி ஆரோக்கியமாக இருந்தால் தான் அக் குடும்பத்தின் செயற்பாடுகள் சீராக அமையும். எனவே தான் முன்னோர்கள் அக் காலத்திலேயே பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய உணவை கட்டாயமாக்கியிருந்தனர். அதாவது பெண் பருவமடையும் போதும் கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் பாரம்பரியமான விசேட உணவுப் பழக்கங்களை கடைப் பிடிப்பது வழக்கம். இவற்றைக் கடைப்பிடிக்காததாலேயே இக்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் தாமதம்,கருச்சிதைவு, இளம் வயதிலே உடற் பருமன் ஆகியன ஏற்படுகின்றன.

இன்றைய நவநாகரீக உலகிலே முன்னோர்கள் வகுத்தவை யாவும் கேலிக்கூத்தாகவே சித்தரிக்கப் படுகின்றன. அவற்றை மேலோட்டமாக விளங்கி கருத்திடாமல் அதன் உட் பொருளை விளங்கிக் கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

இலங்கையில் யாழ்ப்பாண பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்படையும் போது ஒரு மாத காலத்திற்கு பத்திய உணவு வழங்கப்படுகிறது. இவ் உணவிலே உழுந்தும் நல்லெண்ணை யும் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பப்பை மற்றும் இடுப்பெலும்புகளை வலுப்படுத்துவதில் இவற்றிற்கு நிகர் எதுவுமில்லை. மேலும் கத்தரிப் பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு ஆகியனவும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சரக்குக்கறி எனப்படும் பத்தியக்கறியுடனே அப் பெண்ணுக்கு உணவு வழங்கப்படும். இதில் மல்லி, சீரகம், இஞ்சி, உள்ளி, மஞ்சள் என பல மூலிகை சரக்குகள் சேர்க்கப்படுகின்றன. மல்லி சீரகம் போன்றவை இரும்புச் சத்தை கொண்டுள்ளதோடு உடலை சீர்ப்படுத்தும் தன்மையுள்ளவை. இவை அப் பெண்ணின் உடலை வலுவாக்குவதோடு எதிர் காலத்தில் இன்னோர் உயிரை உடலில் தாங்குமளவுக்கு உடலை வலுப்படுத்துகின்றன.

அடுத்து திருமணமான புதுமணத்தம்பதியருக்கு உழுத்தங்களி மற்றும் பால் என்பன வழங்கப்படும் வழக்கம் உள்ளது. மேலும் உறவினர் வீடுகளில் அவர்களை அழைத்து விருந்து வைப்பதுவும் வழக்கம். இது அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடலை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான கருவை உருவாக்கவும் உருவான கருவை ஆரோக்கியமானதாக பெற்றெடுக்கவும் ஏற்றவாறு சத்தான உணவுகளை உறவினர்களால் வழங்குவதற்கும் உருவான வழக்கமாகும். ஆனால் இன்றைய காலகட்டத்திலே உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் கலக்கப்பட்ட துரித உணவுகளை புதுமணத்தம்பதிக்கு வழங்கி அவர்களை வைத்தியசாலைக்கு ஓடச் செய்கின்ற நாகரீகமே பரவி வருகிறது.

அடுத்து கர்ப்ப காலத்தில் உணவு எப்போதும் முக்கியத்துவம் வகிக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பண்டைய வழக்கமாக சில சமூகங்களில் யாப்பண்டம் எனும் பெயரில் பலவகை மாறுபட்ட சுவையுள்ள சாதங்களை உறவினர் எடுத்து வந்து கொடுக்கும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுவதாக அறிந்துள்ளேன். ஆயினும் இவ் விழா பற்றிய போதிய விளக்கம் கிடைக்கவில்லை.

மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்பப்பையை உறுதியாக்க  குங்குமப்பூ பாலுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது.ஆயினும் இது பிள்ளை நிறமாக பிறக்க கொடுக்கப்படுவதாக ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது.

பண்டைய காலத்திலே கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு கர்ப்பகாலத்தின் ஒன்பது மாதங்களும் கர்ப்பத்தை போஷித்து வளர்க்கக்கூடிய கர்ப்பரட்சணி எனும் மூலிகைகள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

குழந்தை பெற்ற பெண்ணுக்கு மேலே பூப்படைந்த பெண்ணுக்கு குறிப்பிட்டாற் போல பத்தியமாக சரக்கு, காயம், கத்தரிக்காய் உழுந்து நல்லெண்ணை போன்றனவற்றுடன் மேலதிகமாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்காக முருங்கைப்பிஞ்சு, பாற்சுறா போன்றவையும் வழங்கப்படுகிறது.

இப்பருவங்களுக்கு அடுத்து ஒரு பெண் எதிர் நோக்கும் இன்னுமொரு சவால் மிக்க காலம் தான் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலம்.


 இக்காலப்பகுதி உண்மையிலே ஒரு பெண்ணின் வாழ்வில் சவால் நிறைந்த காலமாகும். ஏனெனில் இக் காலப்பகுதியில் அவளே ஒரு வளர்ந்த பிள்ளைக்கு தாயாகி இருப்பாள். பிள்ளைப்பேறு பூப்பு ஆகிய சந்தர்ப்பத்திலெல்லாம் பெற்றோரோ இல்லை உற்றோரோ துணையிருப்பர். ஆனால் இப்பருவத்தில் தனக்கு தேவையானதை தானே செய்ய வேண்டியிருக்கும். உடல் நிலையுடன் மனநிலையும் உழைச்சலுக்குள்ளாகியிருப்பர். 


மேலும் பிள்ளைகளுக்கு விருப்பமானதையும் மற்றும் அவர்களுக்கு தேவையானதையுமே செய்து அவர்களது மிகுதி உணவை உண்டு பழகியிருப்பர். எனவே ஆரோக்கியம் மேலும் பாதிப்படையும். இக்காலத்திலே என்புத் தேய்மானம் ஏற்படாமல் இருக்க கல்சியம் மிகுந்த முருங்கை கீரை பால் முட்டை தவசிமுருங்கை மீன்கள் போன்றவற்றை உள்ளெடுக்க வேண்டும். மேலும் உதிரப்போக்கு அதிகரித்தால் இரும்புசத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய கீரைவகை பேரீச்சை பீற்றூட் போன்றவற்றை உள்ளெடுக்க வேண்டும். அத்துடன் மலச்சிக்கலை போக்க பழவகை கீரைகள் மற்றும் உடற்சூட்டை தணிக்க பழஞ்சோற்று நீர் கற்றாளை போன்றவற்றையும் உள்ளெடுக்க வேண்டும்.

எனவே நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். பாரம்ரிய முறைகளில் எவ்வளவோ நல்ல விடயங்கள் உள்ளன. ஆனால் நாம் அவற்றை எல்லாம் மூடநம்பிக்கை என்ற பெயரால் புறந்தள்ளி விடுகிறோம். அவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ள தேவையில்லை. அவற்றின் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டாலே போதும். எனவே மருந்தின்றி உணவின் மூலமாக பெண்களின் ஆரோக்கியம் காப்போம். நலமான சமுதாயத்தை உருவாக்குவோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்