நச்சுக்கொடி என்றால் என்ன? ஏன் அதை ஒதுக்குப்புறத்தில் ஆலமரத்தில் கட்டுகின்றார்கள்?

நச்சுக்கொடி அல்லது நஞ்சுக்கொடி தொடர்பாக அண்மையில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது அதில் ஒருவர் இப்படி கூறுகின்றார். நஞ்சுக்கொடியை நம் முன்னோர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஆலமரம் அல்லது அரசமரத்தின் கிளைகளில் கட்டிவிடுவார்கள் இதற்கான காரணம் மண்ணில் புதைத்ததால் அதன் நஞ்சு மண்ணில் பரவி எந்த செடி கொடிகளும் அங்கே முளைக்காது ஆனால் ஆலமரத்தில் கட்டிவிடடால் ஆலமரம் அதில் இருக்கும் விஷத்தை உறிஞ்சிவிடும். சரி வாருங்கள் இவர் கூறுவது உண்மைதானா? உண்மையில் நஞ்சுக்கொடி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். தாயின் வயிற்றினுள் இருக்கும் கர்ப்பப்பையை  குழந்தையுடன் சேர்த்து இணைக்கும் பகுதிகளை நச்சுக்கொடி என்று சாதாரண மக்கள் அழைக்கின்றார்கள் 

உண்மையில் நச்சுக்கொடியின் தொழில்தான் என்ன என்று பார்த்துவிடுவோம் 

மேலே உள்ள படத்தைப்பாருங்கள் குழந்தை, பிளசண்டா, தொப்புள் கொடி அனைத்தையும் கொண்ட மிக மிக அடிப்படையான கட்டமைப்பு காட்டப்பட்டுள்ளது.


குழந்தை வயிற்றுக்குள் உருவாகும்போது குழந்தையுடன் சேர்ந்து உருவாகும் தற்காலிக கட்டமைப்புத்தான் பிளசண்டா மற்றும் அம்பிலிக்கல் கோர்ட் என அழைக்கப்படும் தொப்புள்கொடி

பிளசண்டா- இந்த அமைப்பு குழந்தையையும் தாயையும் இணைக்கும் பாலமாக தொழிற்படுகின்றது ஆனால் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்தப்பகுதியினூடாக குழந்தையின் குருதியும் தாயின் குருதியும் கலப்பதில்லை.

இந்தப்பகுதி ஹோர்மோன்களைச்சுரக்கின்றது

ஒரு பெண் கர்ப்பமடைந்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்வதற்காக HCG எனப்படும் ஹோர்மோன் சலத்தில் இருக்கின்றதா என பரிசோதனை செய்துபார்ப்பார்கள் Pregnancy strip test சலத்தினுள்ளே ஒரு குச்சிபோன்றிருக்கும் ஸ்ரிப்பை வைட்து சோதனை செய்யலாம் ஆனால் இப்போது அட்வான்சாக டிஜிடலில் கூட பரிசோதனைசெய்யமுடியும், இவ்வாறு பரிசோதனைசெய்யும்போது இந்த HCG  சலத்தில் இருந்தால் மட்டுமே ரிசல்ட் போசிட்டிவ் என்று வரும் அதாவது அந்தப்பெண் தாயாகிவிட்டார்.


குழந்தைக்குத்தேவையான குளுக்கோஸ் மற்றும் நியூற்றிசன்கள் சத்துக்கள் அனைத்தையும் தாயிடமிருந்து பிளசண்டா எனப்படும் இந்தப்பகுதியே குழந்தைக்கு வழங்குகின்றது, அதோடு குழந்தையிடமிருந்து கழிவுகளை, ஒக்சிசன் அற்ற குருதியை தாய்க்கு கடத்துவதும் இந்த அமைப்புத்தான். சாதாரணமாக உடலின் அங்கங்களுக்கு தேவையான அடிப்படை இரத்தப்பரிமாற்றத்திற்காக ஒரு நாடி மற்றும் ஒரு நாளங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் ஆனால் ஆச்சரியப்படும்படியாக தொப்புள்கொடியில் மாத்திரம் இரண்டு நாடிகளும் ஒரு நாளமும் காணப்படுகின்றது.



வயிற்றினுள்ளே பனிக்குடத்தினுள்ளே இருக்கும் குழந்தை எப்படி சுவாசிக்கின்றது? பனிக்குடத்தினுள்ளே இருக்கும் பாயம் அல்லது நீருக்குள்ளே இருந்து எப்படி குழந்தை சுவாசிக்கும்? மூழ்கி இறந்துவிடுமே?



வழமையாக நாடி ஒரு அங்கத்திற்கு ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியைக்கொண்டுசெல்லும் ஆனால் இங்கே 2 நாடிகளும் குழந்தையிடமிருந்து ஒட்சிசன் இல்லாத காபனீர் ஒட்சைட் இருக்கும் கழிவு இரத்தத்தையே தாய்க்கு வழங்குகின்றது. சுருக்கமாக கூறினால் குழந்தை வயிற்றினுள்ளே இருக்கும்போது குழந்தை சுவாசிப்பதே இதனூடாகத்தான் அதாவது குழந்தையின் நுரையீரலே இதுதான் ( பிளசண்டா).

பிளசண்டா என்ற இந்த அமைப்பை கர்ப்பப்பையில் எந்த இடத்திலும் உருவாகலாம் ஆனாலும் பொதுவாக கர்ப்பப்பையின் வாசலில் இது உருவாவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.






கருப்பைவாசலை பிளசண்டா மூடியிருந்தால் அதை placenta previa என்று கூறுவார்கள். இதிலும் மூடப்பட்டிருக்கும் அளவிற்கு ஏற்ப வேறுவேறுபெயர்கள் காணப்படுகின்றது.


இவ்வாறான பிளசண்டாவுடன் ஒரு பெண் கர்ப்பமடைந்திருந்தால் அதிகக்குருதிப்பெருக்கால் தாய் மற்றும் குழந்தை இருவரும் மரணிப்பதற்கான ஆபத்து சற்று அதிகமாக இருக்கும் ஆனாலும் வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சையின்மூலம் இருவரையும் காப்பாற்றமுடியும்.

இந்த பிளசண்டா என்ற பகுதி குழந்தைபிறப்பதற்குமுன்பே கர்ப்பப்பையில் இருந்து கழருமானால் குழந்தையால் சுவாசிக்கமுடியாது குழந்தை இறந்துவிடும். இதன்போது அதிக இரத்தப்போக்கும் ஏற்படும். இதை placental abruption என்று கூறுவார்கள்.

சாதாரணமாக இவ்வாறு பிளசண்டா கர்ப்பபையைவிட்டு கழருமானால் கழரும்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கையும் அல்ரா சவுண்ட் ஸ்கானையும் வைத்து இதை உடனடியாக கண்டறியமுடியும் ஆனாலும் மேலே இரண்டாவதாக காட்டப்பட்டிருப்பதைப்போன்று வெறியே இரத்தம் கசியாமல் உள்ளேயே இரத்தம் தேங்கும்வகையில் பிளசண்டா கழருமானால் கண்டுபிடிப்பது கடினம் ஆனால் இப்படியான நேரத்தில் குழந்தையின் அசைவு குறைந்துகொண்டுசெல்வதை தாயாலுணரமுடியும் உடனே வைத்தியசாலைக்குச்சென்று ஸ்கான் செய்வதன்மூலம் ஆபத்தைக்கண்டறியமுடியும்.

இரட்டையர்களாக இருந்தால் பிளசண்டா எப்படி இருக்கும்?
இதிலும் பலவகைகள் இருக்கின்றன. ஒரு பிளசண்டாவை இருவரும் பகிர்ந்துகொள்ளும்வகை, தனித்தனி பிளசண்டாவை தமக்காக குழந்தைகள் வைத்திருப்பார்கள். கீழே உள்ளபடம் மேலதிக விபரங்களுக்கு.




தொப்புள் கொடியிலும் சில அசாதாரண நிலைகள் காணப்படுகின்றன.




தொப்புள்கொடி கர்ப்பப்பையினூடாகவெளியேவரலாம், தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தை சுற்றியிருக்கலாம், தொப்புள்கொடியில் முடிச்சுக்கள் இருக்கலாம், இவற்றினாலும் ஆபத்துக்கள் ஏற்படலாம். இவற்றினால் தொப்புள்கொடி நசிவடைவதால் குழந்தைக்குதேவையான ஒக்சிசனை குழந்தையால் பெற்றுக்கொள்ளமுடியாது இதனால் குழந்தை இறந்துவிடும். இதை அறிந்துகொள்ள குழந்தையின் இதயத்துடிப்பு பதிவுசெய்யப்படுகின்றது.




இதை வாசிக்கும் நீங்கள் ஒரு கர்ப்பவதியாக இருந்தால் இதைவாசித்துவிட்டு பயப்படவேண்டாம், மேலே கூறியவை மிக அரிதாக சிலருக்கு நடக்கவாய்ப்புகள் இருக்கின்றன, சரியான நேரத்தில் வைத்தியஉதவியை நாடுவதன்மூலம் உங்களையும் குழந்தையையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

சரி நான் தொடங்கியவிடயத்திற்கு வருகின்றேன், எதற்காக நச்சுக்கொடி என்று பெயர்வைத்தார்கள் என்று எனக்குத்தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கொமண்டுங்கள் ஆனால் நச்சுக்கொடியென இவர்கள் எதைக்கூறியிருந்தாலும் அது நஞ்சல்ல அது நஞ்சாக இருக்குமானால் அது உருவாகும்போதே தாய்,சேய் இருவரும் இறந்துவிடுவார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்